×

பெரியசெவலை கிராமத்தில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் நியாய விலைக்கடை கட்டிடம்

*புதிதாக கட்டிக்கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள நியாய விலைக்கடை கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியசெவலை கிராமத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

மொத்தம் 1,700க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ள இக்கிராமத்தில் 2 பகுதி நேர ரேஷன் கடையும், ஒரு முழு நேர ரேஷன் கடையும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்குள்ள முழு நேர நியாய விலைக்கடையில் 1,100க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

ஆனால் அதற்கான நியாய விலைக்கடை கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது உள்ள கடை புதுத்தெரு, பட்டித் தெரு, தேர்முட்டி தெரு உள்ளிட்ட தெருவை சேர்ந்த மக்களுக்கு தூரமாக உள்ளதால் வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் உள்ள குடும்பத்தினர் எளிதில் சென்று பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே பெரியசெவலை கூட்டுறவு வங்கி கட்டிடத்தில் இயங்கி வந்தது போலவே மீண்டும் அதே இடத்தில் முழு நேர நியாய விலை கடையை அமைத்து கொடுக்கும்படியும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெரியசெவலை கிராமத்தில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் நியாய விலைக்கடை கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Periyasevalai village ,Thiruvenneynallur ,Periyasevalai ,Villupuram district ,
× RELATED குடிநீர் கிணற்றில் இறந்து கிடந்த நாகப் பாம்பு